உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கலாமே! அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கலாமே! அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

தாண்டிக்குடி : திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் சப்ளை,சுகாதாரக் கேடை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் மவுனமாக இருப்பதால் பொதுமக்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் விவசாயமே பிரதானம் என்ற நிலையில் குக்கிராமங்களை உள்ளடக்கிய 306 ஊராட்சிகள் உள்ளன. நாட்டின் வளர்ச்சியில் கிராமப் பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சூழலில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் சுகாதாரம்,குடிநீர் சப்ளையில் கவனம் செலுத்துவதில்லை. கிராமப் பகுதியை பொருத்தமட்டில் அடிப்படை வசதிகளாக குடிநீர்,சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலையில் இதற்கான நிதி ஆதாரங்கள் விடுவித்த போதும் பெரும்பாலான கிராம பகுதிகள் சுகாதாரக்கேடு நிறைந்து, சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வருகை தரும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரம், குடிநீர் சப்ளையின் நிலைகளை கண்காணிப்பதில்லை. மாறாக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கவனிப்புகளை பெற்று கொண்டு மக்களின் சுகாதாரத்தில் விளையாடும் அவலம் உள்ளது. சமீபத்தில் சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் கூடுதல் மழைப்பொழிவு, அதிகப்படியான வெப்பத்தின் தாக்கம் நீடித்தது. இவை பொதுமக்களுக்கு உடல் ரீதியான உபாதைகளை ஏற்படுத்தியது. தற்போது மலைப்பகுதிகளில் ஏராளமானோர் டெங்கு, சிக்கன் குனியா, டைப் ஆயிடு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் குடிநீர் ,சுகாதாரம் முறையாக பேணப்படாததே காரணமாகும். குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளின் குடிநீர் ஆதாரங்கள்ஆற்றுப் படுகை,கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை மையப்படுத்தியே உள்ளது. இவற்றிலிருந்து வரும் தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரித்து அவை முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலான குடிநீர் பைப் லைன்கள் சேதமடைந்து புதுப்பிக்காமல் சாக்கடையில் செல்லும் அவலத்தால் குடிநீரில் கழிவு நீர் கலக்கின்றன. கிராமப் பகுதிகளில் ஏற்படும் நோய் தொற்றின் போது சுகாதாரத்துறை பெயரளவிற்கு ஆய்வுகள் மேற்கொண்டு கொசு ஒழிப்பு, சுகாதாரத்தை பேணும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். சுகாதாரத்துறை இப்பிரச்னைகளை கண்டுகொள்ளாததால் மலைப்பகுதிகளில் ஏராளமானோர் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று பாதிப்பு உள்ளாகி உள்ளனர்.சுத்தம் செய்யுங்கஊராட்சி பகுதிகளில் முறையாக குப்பைகள் அள்ளப்படாததும், நீர்நிலைகளில் நேரடியாக கலக்கும் குப்பை,சுத்திகரிப்பு வசதி வேண்டி நேரடியாக குடிநீர் சப்ளை செய்வதால் நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய ஊரக உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள்,சுகாதாரத் துறையினர் கண்டு கொள்வதில்லை. மாறாக ஊராட்சிகளில் பணிபுரியும் வாட்டர்மேன்களும் குறைந்த சம்பளத்தில் பணிபுரிவதால் முறையாக பணி புரிவதில்லை. இது போன்ற நிலையால் பொதுமக்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை குறைந்தபட்சம் மாதம் தோறும் துாய்மை செய்தல், அவற்றில் குளோரினேசன் செய்து குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நவீன வசதியுடன் ஏற்படுத்தி, சுகாதாரமான குடிநீர் சப்ளை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.---அசோகன், பாரதிய கிசான், மாநில செயலாளர், கொடைக்கானல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி