கன்னிவாடி: வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால், புளியராஜக்காபட்டி சிக்கான் கண்மாய் சில ஆண்டுகளாக தொடர் மழை காலத்திலும் தண்ணீரின்றி வறண்டுள்ள நிலை நீடிக்கிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது புளியராஜக்காபட்டி சிக்கான் கண்மாய். 50 ஏக்கர் பரப்புள்ள இக்கண்மாய்க்கு, கன்னிவாடியில் இருந்து போத்திநாயக்கன்பட்டி வழியே வரும் மறுகால் வரத்து மட்டுமே முக்கிய ஆதாரமாகும். இது தவிர வரத்து வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர், கூடுதல் வரத்து ஆதாரமாக இருந்தது. 5 சதுர கிலோ மீட்டர் வரை நீர் பிடிப்பு பகுதியாக கொண்டு, உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த மறுகால் மூலம், சுற்றியுள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வழித்தட அமைப்புகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயின் கொள்ளளவு, 6 மில்லியன் கன அடியாகும். 100 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் நேரடியாகவும், 60 ஏக்கருக்கும் கூடுதலான நிலம் மறைமுக பாசன வசதியும், நிலத்தடி நீராதாரமாகவும் கொண்டுள்ளன. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வரத்து வாய்க்கால், கண்மாயின் நீர் தேங்கும் பகுதிகளில் மண் மேவியுள்ளது. வரத்து வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளன. ரியல் எஸ்டேட் நபர்களால் வழித்தடம் கபளீகரம் செய்யப்பட்டு, தடை பட்டுள்ளது. சில ஆண்டுகளாக வறட்சி நீடிக்கும் இக்கண்மாய்க்கு, தொடர் மழை நேரங்களில் கூட தண்ணீர் வரத்து இல்லை. 20 சதவீத கண்மாய் பரப்பு, விவசாய நிலமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளன. கண்மாய் முழுவதுமாக தூர்ந்த நிலையில், பெயரளவில் ஆவணங்களில் மட்டுமே நீராதாரமாக இடம் பெற்றுள்ளது. இதனை மேம்படுத்தி, இப்பகுதியின் நிலத்தடி நீராதாரத்தையும், சாகுபடி வளத்தையும் மீட்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். --மண் திருடர்கள் அட்டகாசம் விஜயகுமார் (சி.ஐ.டி.யூ., ஒன்றிய நிர்வாகி, புளியராஜக்காபட்டி): முத்தனம்பட்டி கண்மாய், சிக்கான் கண்மாய் உள்ளிட்ட இடங்களில், வேளாண்மை பணி பெயரைக்கூறி வண்டல் மண் மட்டுமின்றி கிராவல் மண் திருட்டு தாராளமாக நடக்கிறது. முற்றுகையிடும் நேரத்தில் சீட்டு அனுமதி பெற்று எடுப்பதாக கூறுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டு கொள்ளவில்லை. நீர்வரத்து பாதைகளை முறையாக பராமரிப்பதில், ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. வருவாய், போலீஸ், கனிமவள துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. போத்திநாயக்கன்பட்டியில் இருந்து தண்ணீர் கடந்து வருவதில் ஏராளமான தடைகள் உள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இருந்தபோதும் மறுகால் நீர் கண்மாயை வந்தடைவதில்லை. கனமழை பெய்த போதும், வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் வருவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. வேளாண்மை மட்டுமின்றி நிலத்தடி நீர் ஆதாரமும் பாதித்துள்ளது. இவற்றை மீட்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. --ஆக்கிரமிப்புகள் தாராளம் ஜெயராம், விவசாயி, வெயிலடிச்சான்பட்டி: வரத்து வாய்க்காலின் இரு புறமும் விவசாயிகளின் ஆக்கிரமிப்பால் பெரும் பகுதி மாயமாகிவிட்டது. சொற்ப பகுதியையும் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். வரத்து நீர் கடந்து வருவதற்கான வழித்தடத்தை மறைத்துள்ளனர். கரைப்பகுதிகள் மழை நீரால் அரிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளன. பல இடங்களில் கரை சேதம் அடைந்துள்ளதால், மதகுகளும் பராமரிப்பின்றி துார்ந்துள்ளன. பாசன தண்ணீர் செல்வதற்கான பாதை தடைபட்டுள்ளது. வரத்து நீர் வரும் சூழலில், கண்மாயில் தேங்கி நிற்க இடமில்லை. முழுவதுமாக புதர் மண்டியுள்ளது. பராமரிப்பு இல்லாததால், நீர் முழுவதுமாக மறுகால் வழியே வெளியேறும் நிலை உள்ளது. இதுவரை முழுமையான தூர்வாருதல், கரை பலப்படுத்தல், வரத்து நீர் ஆதார பராமரிப்பு பணிகள் பெயரளவில் கூட நடக்கவில்லை. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.