| ADDED : மார் 29, 2024 05:08 AM
எருமப்பட்டி: இரவு நேரங்களில், எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொன்னேரி சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு சென்று தினமும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் துறையூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் பஸ்கள், எருமப்பட்டி நகருக்குள் செல்லாமல் நேரடியாக கைகாட்டி வழியாக செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து எருமப்பட்டிக்கு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள், கைகாட்டியில் இறங்கி, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு இருட்டில் நடந்து செல்லும் நிலை உள்ளது.இதனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், பொது மக்களின் நலன் கருதி இரவு நேரங்களில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களை, எருமப்பட்டி நகருக்குள் செல்ல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.