| ADDED : ஆக 15, 2024 01:25 AM
கோபி, ஆறாவது கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், முளைப்பாலிகை இடுதல் பூஜை கோலாகலமாக நடந்தது.கோபி அருகே, பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், ஆறாவது கும்பாபி ேஷக விழா வரும் 23ல் கோலாகலமாக நடக்கிறது. அதனால் மூலவர் அறை உட்பட 33 சுவாமி சிலைகளையும் அகற்றாமல், அனைத்து கோவில் அறைகளையும் சீரமைக்க கடந்த ஜூலை, 7ல் பாலாலயம் நடந்தது. விநாயகர், மூலவரான முத்துக்குமாரசாமி, கைலாசநாதர், பெரியநாயகி ஆகிய சுவாமிகளின் அருட்சக்தி அத்திமரத்திலும், 29 பாலாலய மூர்த்திகளின் அருட்சக்தி கண்ணாடியிலும் ஆவாகனம் செய்யப்பட்டது.இதையடுத்து தற்போது வரை, 90 சதவீத திருப்பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் கும்பாபி ேஷக விழா வரும் ஆக.,19 காலை, 9:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. அதனால் கோவில் வளாகத்தில், எட்டு வேதிகை, 16 யாக குண்டம் என தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முளைப்பாலிகை இடும் பூஜை, சிவச்சாரியார் சுந்தரமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. ஒன்பது நவதானியங்களை கொண்டு, 108 தட்டுகளில் முளைப்பாலிகை இடுதல் பூஜை நடந்தது. அப்போது சிவாச்சாரியார்களின் வேதமந்திரம் முழங்க பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.