ஈரோடு;சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை சிப்காட்டில் கடந்த, 2017 முதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள ஹாலில் அனைத்து கூட்டமும் நடத்தப்படும். கடந்த, 5ம் தேதி மாதாந்திர நேரடி கலந்தாய்வு கூட்டத்தை, அந்த அரங்கில் நடத்தாமல் தவிர்த்தனர். மக்கள் தரப்பில் மனு கொடுக்க வருவது வழக்கம். அன்று, தொழிற்சாலை தரப்பில் ஆட்களையும், வெளி நபர்களையும், போலீசாரையும் அழைத்து, 43 பேர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.அந்த அறையை பெருந்தொகை செலவிட்டு, அலுவலகமாக மாற்ற யார் பணம் வழங்கினார்கள் என விளக்க வேண்டும். கலெக்டர், அமைச்சரிடம் தெரிவிக்காமல் போலீசாரை வைத்து சூழ்ச்சி செய்தது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன், மக்களை நேரடியாக சந்திக்க மறுக்கிறார். இதுபோன்ற பிரச்னை குறித்து விவாதிக்க, கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி, இப்பகுதி மக்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பிரதிநிதிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள், சிப்காட் உயர் அதிகாரிகள் பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.