திருப்பூர்: ஓட்டு எண்ணிக்கை மைய கண்காணிப்பு பணியில் இருந்து, வருவாய்த்துறையினர் விடுவிக்கப்பட்டு, மற்ற அரசுத்துறை அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் லோக்சபா தொகுதியில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், எட்டு 'ஸ்ட்ராங் ரூம்'கள் அமைத்து, ஆறு தொகுதிகளில் பயன்படுத்தி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.துணை ராணுவப்படையினர் உட்பட, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உட்பட, நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வேட்பாளரின் பிரதிநிதிகள், மூன்று ஷிப்ட் முறையில், 'சிசிடிவி' படக்காட்சியை கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், 18 வருவாய்த்துறை அலுவலர் அடங்கிய வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. வழக்கமான நிர்வாக பணி மற்றும் அடுத்தகட்ட தேர்தல் பணி பாதிக்கும் என்பதால், வருவாய்த்துறை அலுவலர்கள், கண்காணிப்பு பணியில் இருந்து, நேற்று விடுவிக்கப்பட்டனர்.ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வணிகவரித்துறை அலுவலர்களில் இருந்து, 18 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கும், தலா மூன்று பேர் வீதம், தலா எட்டு மணி நேர இடைவெளியில், மூன்று 'ஷிப்ட்'டுகளாக பணியாற்ற, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலரின் ஒப்புதலை பெற்று, இன்று முதல், புதிதாக நியமிக்கப்பட்ட அரசுத்துறையினர், ஓட்டு எண்ணிக்கை மைய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.