ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தல் தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இவ்விதிகள் அமலில் இருக்கும்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அல்லது ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விடுமுறை அல்லாத நாளில் காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணிக்குள் வரும், 20 முதல், 27 க்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். ஞாயிறு, 2வது, 4வது சனிக்கிழமை வேட்பு மனு பெறப்படாது. கலெக்டர் அலுவலகத்தில், 28 காலை, 11:00 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடக்கும். 30 மதியம், 3:00 மணிக்குள் வேட்பாளர் விலகல் அறிவிப்பை கொடுக்கலாம். சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் ஜூன், 4 ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 3 பறக்கும் படை குழு என, 25 குழு, நிலையான கண்காணிப்பு குழு தலா, 3 என, 24, வீடியோ கண்காணிப்பு குழு தலா, 1 என, 8, வீடியோ பார்க்கும் குழு தலா, 1 என, 8, கணக்குகள் தணிக்கை குழு தலா, 1 என, 8 குழுக்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுவர்.பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் என அனைவரும், 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கத்தொகை கொண்டு செல்லும்போது, உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.