| ADDED : ஏப் 13, 2024 07:34 AM
திருப்பூர் : நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்டும் நோக்கில் திருப்பூரில் நேற்று மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சப்-கலெக்டர் அலுவலகத்தில், காலை, 9:30 மணிக்கு வாகன ஊர்வலம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இருபதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரில், காலை, 9:00 மணிக்கு வந்துவிட்டனர். ஆனால், சப்-கலெக்டர் சவுமியா, 10:30 மணிக்கு தான் வந்தார். சப்-கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைக்க, மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஸ்கூட்டரில், குமரன் ரோடு, காமராஜர் ரோடு, தென்னம்பாளையம் வழியாக 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.அங்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் வருகைக்காக காத்திருந்து, மதியம், 12:15 மணிக்குதான் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இப்படி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம்; கலெக்டர் அலுவலகத்தில் 1.15 மணி நேரம் என, விழிப்புணர்வு நிகழ்ச்சி என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளை 2.15 மணி நேரம் வரை காத்திருக்கச் செய்து, நோகடித்துவிட்டனர்.