| ADDED : பிப் 01, 2024 11:25 AM
ஈரோடு: ''கனிராவுத்தர் குளம் பகுதியில், 60 கோடி ரூபாய் செலவில் புதியதாக பஸ் ஸ்டாண்டு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.ஈரோடு மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரப்பில் பேசியதாவது :ஈரோடு அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் ஏலம் விடப்பட்டதில் சில கடைகள் வணிக வளாகத்தில் இடம் பெறாத கடைகளுக்கு ஏலத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்த கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் கட்டணம் வசூலிப்பது, குடிநீர் விநியோகம் ஆகிய பணிகளை தனியாருக்கு விடக்கூடாது. புதியதாக கட்டப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் முறையாக ஏலம் விட வேண்டும். மாநகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதால் காய்கறி மார்க்கெட்டை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும். குறிப்பாக மாநகராட்சி விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ஜவுளி வணிக வளாகம் ஏலம் விடுவது தொடர்பாக, 5 முறை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டு முறையாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. 440 கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், 200 கடைகள் ஏலம் முடிக்கப்பட்டுள்ளது. கனிராவுத்தர் குளம் பகுதியில், 60 கோடி ரூபாய் செலவில் புதிதாக பஸ் ஸ்டாண்டு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.