ஈரோடு,:'துாய்மை
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து வழங்க
வேண்டும்' என்று தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வலியுறுத்தினார். தேசிய
துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தலைமையில், அனைத்து துறை
அலுவலர், துாய்மை பணியாளர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில் நேற்று நடந்தது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி.,
ஜவகர், கூடுதல் கலெக்டர் மணீஸ், மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார்
முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு பின் மா.வெங்கடேசன்
கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டமாக துாய்மை பணியாளர் குறித்து ஆய்வு
செய்து வருகிறேன். தேசிய அளவில் துாய்மை பணியாளர் ஆணையம் செயல்படுவது
போல, மாநில அளவில் ஆணையம் செயல்பட வேண்டும். மால், அடுக்கு மாடி
குடியிருப்பில் உள்ளவர்கள் கூட, சாக்கடை வடிகால் அடைத்தால், யாரிடம்
கூறுவதென தெரியவில்லை. தேசிய அளவில், 14420 என்ற எண் இயங்குகிறது.
அதைக்கூட தெரிவிக்க வேண்டும்.ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளர்
நியமிப்பதை ஒழிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள், குறைந்தபட்ச ஊதியம்
தருவதில்லை. பி.எப்., - இ.எஸ்.ஐ., செலுத்துவதில்லை. 15ம் தேதிக்கு
பின்னர்தான் சம்பளம் தருகின்றனர். இதை மாற்ற நிரந்தர பணியாளர்களை
அரசு நியமிக்க வேண்டும். ஈரோட்டில் மகளிர் குழு மூலம் பணி செய்வதால்,
இடைத்தரகர்களின்றி செயல்படுவது சிறப்பாகும். இதுபோல கூட அமைக்கலாம்.கர்நாடகா,
ஆந்திராவில், நிரந்தர பணியாளர்களும், ஒப்பந்த பணியாளர்களும்
இல்லை. மாநகராட்சிகளே நேரடியாக பணியாளர்களை நியமித்து, கூலியை
வங்கி கணக்கில் செலுத்துகிறது. அதுபோல, தமிழகத்தில் கொண்டு வர
வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லுாரியிலும்
துாய்மை பணியாளர்களை, ஒரே நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து
செயல்படுத்துகிறது. அவர்களுக்கான கூலியை, சுகாதாரம் மற்றும்
மருத்துவ துறை நிர்ணயித்தாலும், அதை ஒழுங்காக வழங்குவதில்லை. இதை
மாற்றி, கலெக்டர் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச கூலியை வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பிரச்னை உள்ளது. இதற்கு அரசு தீர்வு
காண வேண்டும்.அதேபோல, துாய்மை பணியாளர்களின் கணவன் அல்லது மனைவி
குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் செய்ய என்.எஸ்.கே.டீ.சி., என்ற
திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. ஈரோட்டில், 33 பேர் கடன்
பெற்றுள்ளதாக கூறினர். இன்னும் அதிகமாக பயன் பெற முகாம் நடத்தி,
விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுள்ளோம். துாய்மை பணியாளர்களுக்கு
பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்க வேண்டும். அவர்கள்
பயன்படுத்தும் கை உறைக்குள் தண்ணீர் vசென்றுவிடுவதால் ஈரமாகிறது.
அதை பயன்படுத்த முடியவில்லை. ஈரமாகாத உறையை தயாரித்து தர
ஐ.ஐ.டி.,யில் கேட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.