உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடனை தராத ஆசிரியரால் கலக்கத்தில் வந்த முதியவர்

கடனை தராத ஆசிரியரால் கலக்கத்தில் வந்த முதியவர்

ஈரோடு:பவானி, லட்சுமிநகர், ஈ.பி.காலனியை சேர்ந்தவர் நாராயணன், 80, சமையல் தொழிலாளி. ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு மனுவுடன் நேற்று வந்தவர், அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து, தன்னிடம் இருந்த பாட்டிலை அடிக்கடி பார்த்தபடி இருந்தார். சந்தேகமடைந்த பெண் காவலர், எஸ்.பி., அலுவலகம் முன்புறம் இருந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ.,யிடம் இதுபற்றி தெரிவித்தார். முதியவரிடம் அவர் சோதனை செய்ததில், மண்எண்ணெய் நிரப்பிய பாட்டில் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.முதியவர் நாராயணன் அவரிடம் கூறியதாவது: எங்கள் பகுதியை சேர்ந்தவர் அசோக், 42; ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த, 2021ல், 1.70 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை கொடுத்தேன். ஆனால், கடனை பல முறை கேட்டும் தரவில்லை. சித்தோடு போலீசில் சில மாதங்களுக்கு முன் புகார் செய்தேன். போலீசார் அசோக்கை அழைத்து விசாரித்து பணத்தை கொடுக்கும்படி கூறினர். இரண்டு மாதங்கள் தலா, 5,000 ரூபாய் கொடுத்தார். அதன் பின் பணம் கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப பெற்று கொடுக்ககோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தேன். நானும் மனைவி, குப்பாயம்மாளும் வறுமையில் தவித்து வருகிறோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில்தான் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தேன். இவ்வாறு கூறினார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபிரபு விசாரித்த பிறகு, சித்தோடு போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவிக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ