ஈரோடு, ஈரோடு பெரியசேமூர் எல்.வி.ஆர்., காலனியை சேர்ந்த மணி மனைவி கமலம், 60; கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்தார்.இவரது மகன் சேனாதிபதி. புதுச்சேரி தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி ஈரோடு மூலப்பாளையத்தில் பெற்றோருடன் வசிக்கிறார். விடுமுறை நாட்களில் ஈரோட்டுக்கு வரும் சேனாதிபதி, மனைவி மற்றும் தாயாரை பார்த்து செல்வார். தினமும் மாலை அல்லது இரவில் தாயாருடன் போனில் பேசுவார்.நேற்று முன்தினம் தாயாரை போனில் பல முறை தொடர்பு கொண்டும், போனை எடுக்காததால், பக்கத்து வீட்டில் வசிப்போரை பார்க்குமாறு கூறினார். அவர்கள் சென்றபோது வீட்டுக்குள் தலை, முகம், கையில் காயங்களுடன், கழுத்து அறுபட்ட நிலையில் கமலம் இறந்து கிடந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.விசாரணையில், கமலம் அணிந்திருந்த ஐந்து பவுன் நகைக்காக, நோட்டமிட்ட நபர், குக்கர் மூடியால் தலை, முகம், கையில் தாக்கி கொலை செய்து, ஆயுதத்தால் கழுத்தை அறுத்தது தெரியவந்தது.ஐந்து தனிப்படையினர் கொலை நடந்த இடம், அப்பகுதி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பதும், தலைமறைவானதும் தெரியவந்தது. கமலத்தின் நகை, மொபைல்போனை எடுத்து சென்றதால், மொபைல்போன் லொகேஷனை அறிந்து பின் தொடர்ந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் சுவிட்ச் ஆப் ஆனது. அவிநாசிக்கு விரைந்த போலீசார், அங்கு பதுங்கியிருந்த ராமரை பிடித்து, ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். ரகசிய இடத்தில் விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.