ஈரோடு : கோடைமழையை எதிர் நோக்கி, மானாவாரி விவசாயிகள் காத்துள்ள நிலையில், மழை ஏமாற்றும் பட்சத்தில் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்படும் என, விவசாயிகள் கருதுகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த பிப்., முதல் கடும் வெயில் வாட்டுவதுடன், முற்றிலுமாக மழை நின்று போனது. மதிய நேரம் என்றில்லாமல், இரவில் கூட வெப்பம் நிலவுகிறது. வழக்கமாக ஏப்ரல் இறுதி - மே மாதங்களில் கோடை மழை பெய்து, விவசாயிகளுக்கும், கால்நடை உட்பட மனிதர்களுக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும். இந்தாண்டு மழை பொழிவு இல்லை என்பதுடன், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்தும் முற்றிலும் குறைந்து, அணையே வரண்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள நீரை வைத்து ஜூன், 15 வரை குடிநீருக்காவது வழங்க இயலுமா என்ற கேள்வி மாவட்ட நிர்வாகத்திடம் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது. அத்துடன் கீழ்பவானி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காளிங்கராயன், மேட்டூர் மேற்கு கரை, கசிவு நீர் திட்ட பாசனங்கள் காய்ந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களிலும் கோடை உழவு செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.இதுபற்றி, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:ஆயக்கட்டு நிலங்களுக்கே பாசன நீர் இல்லை என்ற நிலையில், மானாவாரி நிலங்களின் நிலை மிக மோசமாக உள்ளது. இந்தாண்டு கோடை மழை ஏமாற்றி வருவதால், கோடை பயிர் சாகுபடிக்கு நிலத்தைக்கூட தயார்படுத்தாமலேயே விவசாயிகள் உள்ளனர். கடுமையான வெயிலால் களைகள் கூட முளைக்காமல் உள்ளது. இதனால், வரும் ஆண்டில் கால்நடைகளுக்கான தீவனப்பயிர்களை கூட விதைப்பு செய்ய முடியவில்லை.பொதுவாக சித்திரை மாதம் வெப்ப சலனத்தால், கோடை மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சோளம், நிலக்கடலை, கம்பு, கால்நடை தீவனப்பயிர்களை பயிரிடுவர். இதுவரை மழை இல்லை என்பதுடன், வரும் நாட்களிலும் மழைக்கான அறிகுறியே இல்லாததால், வீண் செலவை தவிர்க்கவே விவசாயிகள் விரும்புகின்றனர்.இதே நிலை மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மானாவாரி விளை நிலங்களில் விளைவிக்கப்படும் உணவு பொருட்களுடன், கால்நடை தீவனத்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவும்.இவ்வாறு கூறினார்.