| ADDED : மே 21, 2024 11:38 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், சதீஸ்குமார் ஆகியோர், பெட்டியில் மனு போட்டு கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக சொற்ப சம்பளத்தில் டாஸ்மாக்கில் பணி செய்கிறோம். அரசுக்கு பெரிய வருவாயை ஈட்டிக்கொடுக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சமீப காலமாக சமூக விரோதிகளால் சுட்டு கொல்லப்பட்டும், ஆயுதங்களால் தாக்கப்பட்டும் பாதிக்கின்றனர்.தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து, இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபமாக டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை சேகரம் செய்வது தொடர்பான பணியை வழங்கி, ஒரு பாட்டிலுக்கு நுகர்வோருக்கு, 10 ரூபாய் வழங்க கூறி வருகின்றனர். நுகர்வோர் பயன்படுத்திய பாட்டிலை மீண்டும் கடைகளில் சேகரித்து, 10 ரூபாய் வீதம் வழங்கி அதனை கணக்காக பராமரித்து, வங்கி தொகையில் ஈடுசெய்வது சிரமமானது. இடபற்றாக்குறை உள்ளதால், பாட்டில் சேமிப்பதை கைவிட வேண்டும். மற்ற அரசு துறைகளில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58 ல் இருந்து, 60 என உயர்த்தி வருவதால், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை, 60 என உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.