| ADDED : நவ 24, 2025 07:07 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஸ்கூட்டியை உதைத்து தள்ளி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி கலைச்செல்வி,45; இவர், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். கடந்த 22ம் தேதி மாலை பணி முடிந்ததும் கலைச்செல்வி சங்கராபுரத்தில் இருந்து பஸ்சில் ஆலத்துாருக்கு வந்தார். இரவு 8 மணியளவில் ஆலத்துாரில் இருந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார். அப்போது, முகமூடி அணிந்தவாறு பைக்கில் வந்த 3 மர்மநபர்கள், ஸ்கூட்டியை எட்டி உதைத்ததால் கலைச்செல்வி நிலைதடுமாறி கீழே விழுந் தார். மர்மநபர்கள் கலைச்செல்வியை தாக்கி, கழுத்தில் உள்ள செயினை தருமாறு மிரட்டியதால், அவர் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதை கேட்ட செங்கல் சூளையிலிருந்த வந்த நபர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த மர்மநபர்கள் பைக்கில் தப்பி சென்றனர். மர்மநபர்கள் தாக்கியதால் காயமடைந்த கலைச்செல்வி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.