| ADDED : நவ 24, 2025 07:07 AM
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் மூலவர் சுயம்பு லிங்கம் தேனபிஷேகத்தின் போது அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சேதமடைந்த நிலையில் இருந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சியால் அறநிலையத்துறை சார்பில் ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கோவில் திருப்பணிகள் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, இன்று திஷா, சாந்தி உள்ளிட்ட ஹோமங்களும், நாளை (25ம் தேதி) புண்ணியாக வஜனம், முதற்கால யாக பூஜையும், 26ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, திருமுறைகள் பாராய ணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை, வேதிகார்ச்சனை, சோடச உபசாரம் உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது. வரும் 27ம் தேதி (வியாழன் கிழமை) காலை 9.30 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர்கள், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.