காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நடவடிக்கைகளில், தேர்தல் சமயத்தில் சட்டவிரோத மது விற்பனையை போலீசார் கண்காணித்ததில், ஏப்ரல் மாதத்தில் மட்டும், 108 பேரை கைது செய்து, 1,058 பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டனர். பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு விவகாரங்களை, போலீஸ் எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டனர்.அவ்வாறு, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதில், தேர்தல் விதிமீறல் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகளவு கண்காணிக்கப்பட்டு வந்தது.அனுமதியின்றி பிரசாரத்திற்கு வாகனங்களை பயன்படுத்தியது, விதிமீறி பிரசாரம் செய்தது, வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவு கட்சியினர் வந்தது என, பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டதாக, தி.மு.க., - -அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சியினர் மீதும், 58 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர்.விதிமீறல் வழக்குகள் ஒருபுறம் இருக்க, சட்டவிரோத மதுபான விற்பனை செய்தவர்கள் மீதும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொது பார்வையாளர், சிறப்பு செலவின பார்வையாளர், செலவின பார்வையாளர் என, அனைத்து பார்வையாளர்களுமே, டாஸ்மாக் கடை விற்பனையையும், சட்டவிரோத மதுபான விற்பனையையும் கண்காணிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கேற்றாற்போல், மாவட்டம் முழுதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அவ்வாறு, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், ஏப்ரல் 1ம் தேதி முதல், 21ம் தேதி மகாவீர் ஜெயந்தி வரை, சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக, 108 பேர் மீது தலா ஒரு வழக்கு என, 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 108 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.தேர்தல் நடந்த 19ம் தேதி மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல், 21ம் தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால், அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகள் கடந்த வாரம் நான்கு நாட்கள் செயல்படவில்லை. இந்த நாட்களில், அதிகளவு சட்டவிரோத மதுபான விற்பனை நடந்தது.காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டவிரோத மது விற்பனை செய்வோரை, தொடர்ந்து தேடி வந்தனர். இம்மாதம் மட்டும், 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 50 பேரையும் கைது செய்துஉள்ளனர்.காவல் நிலையங்களை பொறுத்தவரையில், காஞ்சி தாலுகா போலீசில், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இம்மாதம் கைது செய்யப்பட்ட 108 பேரிடம் இருந்து, 1,058 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
24 மணி நேரமும் மது விற்பனை!
காஞ்சிபுரத்தில் செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடை, பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் அதிகாலையிலேயே சட்டவிரோத மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இரவு, பகல் என, 24 மணி நேரமும் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்த டாஸ்மாக் கடையை சுற்றியுள்ள பல கடைகள் மதுக்கூடங்களாகவே மாறிவிட்டன. டாஸ்மாக் கடைகளால், சுற்றியுள்ள கடைகளுக்கு கூடுதல் வருமானம் வருவதால், இந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய, அப்பகுதி ஆளுங்கட்சியினர் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இம்மாதம் சட்டவிரோத மது விற்பனை செய்தோர் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம்:
காவல் நிலையம் - கைது செய்யப்பட்டோர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்சிவகாஞ்சி 1 1விஷ்ணுகாஞ்சி 5 20காஞ்சி தாலுகா 13 101பாலுசெட்டிச்சத்திரம் 5 40வாலாஜாபாத் 1 9மாகரல் 4 35உத்திரமேரூர் 9 32பெருநகர் 3 24சாலவாக்கம் 7 48ஸ்ரீபெரும்புதுார் 3 65சுங்குவார்சத்திரம் 4 23ஒரகடம் 3 188மதுவிலக்கு அமல்பிரிவு 50 472மொத்தம் 108 1,058