| ADDED : ஜூலை 20, 2024 05:45 AM
உத்திரமேரூர் : மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், உத்திரமேரூர் ஒன்றியம் சித்தனக்காவூர் ஊராட்சியில் நேற்று நடைபெற உள்ளதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தது.அதற்காக, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தயாராகி வந்தனர். சித்தனக்காவூரில், பல ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா இல்லாமல் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 48 குடும்பத்தினர், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். இதை தொடர்ந்து, தற்போது வரை மனைபட்டா கிடைக்காதது குறித்து, கலெக்டர் கவனத்தை ஈர்க்கும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை புறக்கணிக்கவும், தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றவும் தீர்மானித்தனர்.இத்தகவலை அறிந்த அரசு துறை அதிகாரிகள், திடீரென சித்தனக்காவூரில் நடக்க இருந்த முகாமை, பொற்பந்தல் ஊராட்சிக்கு மாற்றம் செய்தனர். அதன்படி, நேற்று பொற்பந்தல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த் துறை, வேளாண்துறை மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் மனுக்கள் அளித்தனர். இதில், உத்திரமேரூர் தி.மு.க., -எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு, பட்டா நகல் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கினார்.