| ADDED : ஜூலை 05, 2024 09:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், 2024 - 25ம் நிதி ஆண்டிற்கான நாட்டுக்கோழி பண்ணை வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.குறிப்பாக, நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு சார்பில், 1,56,875 ரூபாய் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதத் தொகையை, பயனாளி பங்களிப்பாக அளிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் பயனாளிகளுக்கு, 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். குடியிருப்புகளில் இருந்து, நாட்டுக்கோழி பண்ணை சற்று விலகி இருக்க வேண்டும்.விதவைகள், திருநங்கையர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்தாண்டு நாட்டுக்கோழி திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் பயன்பெற முடியாது.விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைத்திருக்கும் நிலத்திற்கு சிட்டா, 50 சதவீதம் பயனாளி பங்களிப்பு ஆவணங்கள், உறுதிமொழி சான்று உள்ளிட்ட அசல் சான்றுகளுடன், கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.