| ADDED : ஜூலை 02, 2024 12:52 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளத்தில் 320 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரியும், 250 ஏக்கரில் சித்தேரியும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த இரண்டு ஏரிகளின் நீர் பாசனத்தின் மூலம் அப்பகுதியில், 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மலையாங்குளத்தில் உள்ள இரண்டு ஏரிகளும், பல ஆண்டுகளாக துார்வாராமல் உள்ளது. இதனால், ஏரிநீர் பிடிப்பு பகுதி துார்ந்து மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு தண்ணீர் சேகரமாகாத நிலை இருந்து வருகிறது.துார்ந்த ஏரியில் குறைந்த அளவு தண்ணீரே சேகரமாவதால், இப்பகுதி விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடி காலத்தில் இறுதி கட்டப் பாசனத்திற்கு நீர் வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, மலையாங்குளத்தில் சித்தேரி மற்றும் பெரிய ஏரியை துார்வாரி சீர் செய்ய அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.