உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காணொளி காட்சி வாயிலாக ராஜாஜி மார்க்கெட் திறப்பு

காணொளி காட்சி வாயிலாக ராஜாஜி மார்க்கெட் திறப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டை, காணொளி காட்சி வழியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ராஜாஜி மார்க்கெட், போதிய வசதியின்றி செயல்பட்டு வந்தது. எனவே, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், நகராட்சி நிர்வாகத் துறை, புதிய மார்க்கெட் கட்டும் பணிக்காக, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் செயல்பட்டு வந்த ராஜாஜி மார்க்கெட், தற்காலிகமாக ஓரிக்கை பகுதியில், 2022ல் மாற்றம் செய்யப்பட்டது. ரயில்வே ரோட்டில், மார்க்கெட் கட்டும் பணிகள், 2022ல் துவங்கிய நிலையில், பணிகள் மெத்தனமாக நடந்தன. ஒரு வழியாக பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக, ராஜாஜி மார்க்கெட்டின் புதிய கட்டடத்தை நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், சிறு குறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான்கு கடைகளில் காய்கறி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் வியாபாரத்தை, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.புதிதாக திறக்கப்பட்ட ராஜாஜி மார்க்கெட்டில், 80 மொத்த விலை கடைகளும், 180 சில்லரை விலை கடை என, 260 கடைகள் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறை, கேன்டீன் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இதில், காய்கறி, மளிகை, வாழை இலை, பூஜை பொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்வர். மார்க்கெட் கட்டுமான பணிகளில், சுற்றுச்சுவர், பார்க்கிங், சிமென்ட் கற்கள் தரை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பணிகள் பாக்கி உள்ளன.இதற்கு, 74 லட்ச ரூபாய் மதிப்பில், மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. இப்பணிகள் அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ளன.ஓரிக்கையில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டை காலி செய்து, ரயில்வே ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் வியாபாரத்தை உடனடியாக துவக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.டிபாசிட், வாடகை போன்றவை இறுதி செய்த பிறகே, ரயில்வே ரோட்டில் வியாபாரம் துவங்கும் என, வியாபாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்