| ADDED : பிப் 23, 2024 11:33 PM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையக்கரணை ஊராட்சியில், புது ஏரி தாங்கல் உள்ளது. இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கும் காரணமாக உள்ளது.இந்நிலையில், நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையில், 'ரெனால்ட் நிசான்' என்ற தனியார் நிறுவனம் வாயிலாக, ஏரியை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரியை ஆழப்படுத்தி, கரை அமைத்தல் மற்றும் கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்பின், ஏரிக்கரை முழுதும், 5,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இதனால், ஏரியில் கூடுதலாக, 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும்.அதேபோல், வளையக்கரணை ஊராட்சி, ஊமையாள்பரனசேரியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, தனியார் நிறுவனம் சார்பில், 16 லட்சம்ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகளை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கீர்த்தி பிரகாஷ், நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை இயக்குனர் துஷ்யந்த் குமார் உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர்.இதில், வலையக்கரணை ஊராட்சி தலைவர் ராஜன், தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.