ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, செரப்பனஞ்சேரியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீமீஸ்வரர் கோவிலை, 2.96 கோடி ரூபாயில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணியினை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் சொர்ணாம்பிகை சமேத வீமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 2,000 ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்டது. 27 நட்சத்திரங்களுக்கும், விண் மீன்களுக்கும் அதிபதியானதால் வீமீஸ்வரர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில், பல ஆண்டுகளுக்கு மேலாக எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால், கோவில் கோபுரம் மற்றும் சுவர் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தார். இதுகுறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு, விரைவில் கோவில் புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, இக்கோவிலின் பழமை மாறாமல் புனரமைத்து, விநாயகர் சன்னிதி, முருகன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, சண்டிகேஸ்வரர் சன்னிதி, சூரியன் சன்னிதி, சந்திரன் சன்னிதி ஆகியவை கட்ட, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நிதியின் கீழ், 2.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள துவக்க விழா, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார் அதை தொடந்து, கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை, குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி பங்கேற்று துவக்கி வைத்தார். இதில், ஹிந்து சமய அறைநிலைத் துறை காஞ்சி புரம் இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன், சரக ஆய்வர் ரம்யா, மாவட்ட கவுன்சிலர் அமுதா, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.