காஞ்சிபுரம் : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், வீடுகள் கட்டப்பட்டு மூன்று மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படாததால் , குடியேற முடியாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர். உதவிக்கரம் நீட்ட வேண்டிய ஊராட்சிகளும், 'புதிய மின் வழித்தடம் அமைத்துத்தர நிதியில்லை' என்று கூறி, கைவிரித்து விட்டதால் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமர் ஜன்மன் திட்டத்தில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை, 2023ல் மத்திய அரசு துவங்கியது. இதற்கு, மாநில அரசு நிதியாக, 2.80 லட்சம் ரூபாய்; மத்திய அரசின் பங்களிப்பாக, 2.27 லட்சம் ரூபாய் என, மொத்தம் 5.07 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி, இரண்டு நிதியாண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதியில், 95 ஊராட்சிகளில், 742 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதம், 50 சதவீத பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பணி தாமதம் திட்டத்தின்படி, தலா 5 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி, இலவச மின் இணைப்பு பெற வேண்டும். இதுதவிர, குடிநீர், சாலைகள், தெரு விளக்கு ஆகிய வசதிகளை, உள்ளாட்சி நிதியில் செய்து தர வேண்டும். இருப்பினும், போதிய நிதியில்லை என, உள்ளாட்சி நிர்வாகங்கள், மேற்கண்ட வசதிகளை செய்த தர முடியாது என, கைவிரிக்கின்றன. ஊராட்சிகள் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என, பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, பிரதமர் ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகள் கூறுகையில், 'வீடு கட்டி முடித்து மூன்று மாதங்களாகியும், மின் இணைப்பு வழங்காததால், புதிய வீட்டில் குடியேற முடியவில்லை' என்றனர். இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது: மின் இணைப்பு பெற முன்வைப்பு தொகை கட்டணம் குறைவுதான். ஆனால், மின் இணைப்பு கொடுக்க புதிய மின் வழித்தடத்திற்கான மின் கம்பங்கள் நடும் பணி, மின்கம்பி இழுக்கும் பணிக்கு கூடுதல் செலவாகிறது. நிதி இருக்கும் ஊராட்சிகள் செலவிடுகின்றன. நிதி இல்லாத ஊராட்சிகளில், அரசு திட்டங்களை நாட வேண்டி உள்ளது. அதனால், மின் இணைப்பு வழங்கும் பணி தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் இணைப்பு வழங்க தேவையான ஆவணங்கள், அந்தந்த ஊராட்சி தலைவர்களிடம் கேட்டுள்ளோம். ஒரு சிலரின் ஆவணங்கள் உள்ளன; பலரின் ஆவணங்கள் இல்லை என்கின்றனர். ஆவணங்கள் வந்த பின், மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மின் வழித்தடம் அமைக்க, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள்தான் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட, ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊராட்சி நிர்வாகங்களில் நிதி இல்லை என்றால், அதுபற்றிய விபரத்தை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு கடிதம் தர கோரியுள்ளோம். ஏதேனும் ஒரு திட்டத்தில் நிதி பெற்று, மின் வழித்தடம் அமைத்து, பிரதமரின் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்கப்படும்' என்றார். வீடுகள் ஒதுக்கீடு விபரம் ஒன்றியங்கள் 2023 -- -24 2024- - 25 காஞ்சிபுரம் 105 55 குன்றத்துார் 30 151 ஸ்ரீபெரும்புதுார் 70 42 உத்திரமேரூர் 83 101 வாலாஜாபாத் 75 30 மொத்தம் - 742 363 379