| ADDED : ஜன 31, 2024 10:40 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி, 42. இவர், ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன ஏஜன்ட். இவரை, நேற்று முன்தினம் காலை பழமையான மண்டபம் அருகே, ஆறு பேர் கும்பல் காரில் கடத்தியது. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்தனர்.இதில், திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், வெங்கடமுனி வாயிலாக ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பணம் கொடுத்துள்ளார்.நிறுவனம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. கார்த்திக் பலமுறை, வெங்கடமுனியிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக், நண்பர்களுடன் சேர்ந்து, வெங்கடமுனியை ஆந்திராவிற்கு கடத்தி சென்று அடைத்து வைத்தது தெரிய வந்தது.இதையடுத்து, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலத்தில் இருந்த குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, அங்கிருந்து வேலுாருக்கு தப்பி சென்றனர்.தொடர்ந்து, துரத்தி சென்ற போலீசார் கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, வெங்கடமுனியை மீட்டனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.