கரூர், ஆக. 22-கரூர்-திருச்சி சாலையில், பல மாதங்களாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படாமல் உள்ளன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், பல மாதங்களுக்ளுக்கு முன், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது, சிக்னல் விளக்குகள் சேதம் அடைந்துள்ளன.இதனால், நாமக்கல் மாவட்டம், மோகனுார் மற்றும் வாங்கல், தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், கொளந்தானுார் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், திருச்சிக்கு செல்ல தெரசா கார்னர் வழியாக செல்ல வேண்டும். மேலும், கரூர் நகரில் இருந்து திருச்சி, புலியூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு செல்லும் வாகனங்களும், தெரசா கார்னர் வழியாக செல்ல வேண்டும்.மேலும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களும் தெரசா கார்னர் வழியாக செல்ல வேண்டும். இந்நிலையில், தெரசா கார்னரில் சேதம் அடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன.தெரசா கார்னர் பகுதியில், பள்ளிக்கூடம் உள்ளதால், மாணவியர்களும் சாலையை எளிதாக கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், சேதம் அடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம்.