கரூர், சம்பா நெல் சாகுபடியில், ஆனை கொம்பன் ஈக்களை கட்டுப்படுத்தாவிட்டால் மகசூல் இழப்பு ஏற்படும் என, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், 23,326 ஏக்கர் நெல் சாகுபடி நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5,000 முதல், 7,500 ஏக்கர் வரை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நடவு செய்யப்பட் பயிர்களுக்கு, 25-லிருந்து, 30 நாட்களுக்குள், ஆனை கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு, குண்டு துளைப்பான் ஆகிய பூச்சிகள் தாக்குதல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளாது. வெயில் 25--30 செல்சியஸ், 70 சதவீதம் ஈரப்பதத்தில் தொடர்ந்து மேகமூட்டத்துடன் கூடிய வானிலை, அதிகமாக தண்ணீர் நெற்பயிர் வயலில் தேங்கி இருந்தால், ஆனை கொம் பன் ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பூச்சி தாக்குதல், 10 சதவீதத்துக்கு மேல் இருப்பின், 20 முதல், 40 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும். இந்த ஈயை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட நெற்பயிர்களில் துார்களில் உள்ள வெங்காய இலைகளை அப்புறப்படுத்த வேண்டும். தழைச்சத்து உரங்களை, பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்க, புறஊதா விளக்கு பொறிகளை பயன்படுத்தலாம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட அளவின்படி பிப்ரோனில் 5 (எஸ்.சி.) சதவீதம், தையாமீத்தக்சைம் 25 சதவீதம், குளோரான் டிரினிவிங் பூரோல் 18.5 (எஸ்.சி.) சதவீதம் ஆகிய பூச்சி மருந்துகளில், ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் இது குறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.