கரூர், கரூர் அருகே, கோவிலுக்கு சொந்தமான வீடுகளை மீட்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., மாஜி அமைச்சர், காங்., எம்.பி., மற்றும் தி.மு.க., வினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 507 ஏக்கர் நிலத்தை மீட்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம், கோவிலுக்கு சொந்தமான கண்ணம்மாள் என்பவரது வீட்டுக்கு சீல் வைத்து மீட்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் தொகுதி காங்., எம்.பி., ஜோதிமணி, கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலர் பிரேம்நாத், கொ.ம.தே.க., மாவட்ட செயலர் மூர்த்தி, வி.சி.க., மாவட்ட பொருளாளர் சதீஷ், கரூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் முத்துகுமாரசாமி, கரூர் நகர மா.கம்யூ., செயலர் தண்டபாணி மற்றும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் கண்ணம்மாள் வீடு முன் குவிந்தனர்.அப்போது, அவர்கள் அனைவரையும் வாங்கல் போலீசார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர். இந்நிலையில், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் அலி கொடுத்த புகார்படி, அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி உள்பட பலர் மீது, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.