| ADDED : ஆக 12, 2024 06:53 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மலைக்கோவிலை சுற்றி, 3.5 கிலோ மீட்டர் துாரத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மலையை சுற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அய்யர்மலை பின்புறம் முருகன், முனீஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகன் கோவிலை சுற்றி சுவாமி தரிசனம் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.இரவில், கிரிவலப்பாதையை சுற்றி வரும் போதும், முருகன் கோவிலுக்கு சென்று வரும் போதும், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கு காரணம், இரவு, 8:00 மணிக்குள் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுகின்றனர். மேலும், அய்யர்மலைக்கு தென்புறம், மேற்குபுறம் பகுதியில், 'குடி'மகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.எனவே, கோவில் சுற்றுப்பாதையில், 'குடி'மகன்கள் மது அருந்த போலீசார் தடை விதிக்கவும், இரவு, 10:00 மணி வரை கிரிவல பாதையில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.