கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, லாரி டிரைவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட கல்லுாரி மாணவர், போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, தவறி கீழே விழுந்ததில், அவரது கை எலும்பு முறிந்தது. மேலும், பிடிபட்ட சிறுவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கேரளா மாநிலம், நடும்பசேரியை சேர்ந்தவர் அலியாஸ், 43, கன்டெய்னர் லாரி டிரைவர். இவர், கடந்த, 27ல், ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்களை லாரியில் ஏற்றி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார்.கிருஷ்ணகிரி சுபேதார்மேடு அருகில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்தி, டீ குடித்து விட்டு வந்த போது, டூவீலரில் வந்த இருவர், இரும்பு கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் அலியாசை கொன்றனர்.இது குறித்து, மகராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இக்கொலையில் தொடர்புடைய கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த கல்லுாரி மாணவர் காதர் பாஷா, 19 மற்றும், 17 வயது சிறுவனை கைது செய்தனர். இவர்களை, நேற்று முன்தினம் இரவு, 2 டூவீலர்களில் போலீசார் அழைத்து சென்றபோது பைக்கில் இருந்து, காதர்பாஷா குதித்து தப்பிக்க முயன்றார்.இதில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறுவனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். லாரியிலிருந்த பொருட்களை கடத்த முயன்றபோது, கொலை நடந்ததா அல்லது லாரியில் சட்ட விரோதமாக பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.