| ADDED : ஜூன் 27, 2024 03:47 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வருகின்ற ஜூலை 5ல், கிருஷ்ணகிரியில் நடக்கவுள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு, ஊத்தங்கரை பகுதியிலிருந்து விவசாயிகள் கலந்து கொள்வது குறித்தான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து, உழவர் தின பேரணியில் விவசாயிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விவசாயிகள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பால் விலை லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்குவதோடு, பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை சுட, விவசாயிகளுக்கு துப்பாக்கியும், பயிற்சியும், அனுமதியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் மாசிலாமணி, துணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் ராஜா, ஊத்தங்கரை வட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், கோவிந்தன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.