| ADDED : ஆக 02, 2024 11:22 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை பைபாஸ் சாலையையொட்டி குமரன் நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 300 குடும்பங்களைச் சேர்ந்த, 1,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளின் நடுவே தனியார் நிறுவன மொபைல் டவர் அமைக்க, மண் மாதிரி சேகரிப்பதற்காக நேற்று, பொக்லைன் இயந்திரத்துடன் சிலர் வந்தனர். ஆனால், அப்பணிக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.இதையறிந்து அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அங்கு வந்தனர். போலீசாரிடம் அப்பகுதி மக்கள், 'நகராட்சி குப்பையை இப்பகுதியில் எரிப்பதாலும், இரு டவர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்துள்ளனர்.'இந்நிலையில், இன்னொரு மொபைல் டவர் அமைத்தால் கதிர்வீச்சு பாதிப்பால் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடவுள்ளோம்' என்றனர்.இதையடுத்து போலீசார், 'உரிய ஆவணம் எடுத்து வந்த பின் பணியை தொடருங்கள்' எனக் கூறி அனுப்பினர்.