உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடகாவிலிருந்து 40 யானைகள் ஓசூர் வனத்திற்கு இடப்பெயர்வு

கர்நாடகாவிலிருந்து 40 யானைகள் ஓசூர் வனத்திற்கு இடப்பெயர்வு

ஓசூர், கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனத்திலிருந்து ஆண்டுதோறும் அக்., மாதம், 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திற்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடப்பெயர்வு துவங்கிய நிலையில், தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரகத்திற்கு இடம் பெயர்ந்த, 40க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வழியாக ராயக்கோட்டை வனச்சரக, ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்சென்றன. அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு வெளியேறி, நேற்று காலை அனுசோனை, காடு உத்தனப்பள்ளி வழியாக சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. எந்த நேரத்திலும் யானைகள் கூட்டம், ஓசூர் - ராயக்கோட்டை சாலையை கடந்து, போடூர்பள்ளம் வனத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. வனத்தை ஒட்டிய கிராமங்களில், ராகி மற்றும் நெல் அறுவடைக்கு உள்ள நிலையில், போடூர்பள்ளம் வனத்திற்கு யானைகள் இடம் பெயர்ந்ததால், பயிர் சேதம் அதிகமாக நடக்கும். அதனால் யானைகளை, சாலையை கடக்க விடாமல் தடுத்து, தேன்கனிக்கோட்டை வனத்திற்கு விரட்டும் முயற்சியில், ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.சானமாவு வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்தை ஒட்டிய ஆழியாளம், போடூர், சானமாவு, பீர்ஜேப்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனத்திற்குள் விறகு சேகரிக்க, ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும், இரவில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.இதற்கிடையே, கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையிலுள்ள போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியை ஒட்டிய வனத்தில், ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இரவில், அஞ்செட்டி துர்க்கம், இருதாளம், நெருப்புக்குட்டை, காடு உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை