| ADDED : ஜூன் 28, 2024 01:42 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 44,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி நடக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், 2.50 லட்சம் டன் மாங்காய் உற்பத்தியாகிறது. மா விவசாயிகளை போற்றும் வகையில் கடந்த, 1992 முதல் கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் தனியார் திருமண மண்டபங்களில் நடந்து வந்த மாங்கனி கண்காட்சி, பின் பெரிய மைதானத்தில் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. தற்போது, அங்கு விளையாட்டு உபகரணங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் செல்ல, வழியில்லை. சில ஆண்டுகளாக இங்கு நடத்தும் மாங்கனி கண்காட்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்தாண்டு, 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை நடத்த இடம் தேர்வு செய்வதில் சிக்கலால், கண்காட்சியை நடத்துவதில் தாமதமாகிறது. ஜூன் மாதம் நடந்து வந்த மாங்கனி கண்காட்சி நாளடைவில், ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில், இன்னும் இடம் தேர்வு செய்யாததால், ஜூலை, 15க்கு பிறகே மாங்கனி கண்காட்சியை நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை (ஜூன் 29) கிருஷ்ணகிரிக்கு வரும் பொறுப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர், இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகிலுள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் மைதானம் அல்லது டோல்கேட் அருகிலுள்ள தேவராஜ் மைதானம் என, 2 இடங்களிலும், மாங்கனி கண்காட்சியை நடத்தலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.