கிருஷ்ணகிரி: வழக்கத்தைவிட நெல்லுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதால், நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வலம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 2 ஆண்டுகளாக போதிய அளவிற்கு மழை பெய்துள்ளதால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. கடந்த நவ., மாதத்தில் நெல் அறுவடை முடிந்த நிலையில், 2ம் போக சாகுபடிக்காக கடந்த வாரம் கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.இதையடுத்து, நெல் நாற்று விட்டிருந்த விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக நாற்றை பறித்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு, 30,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் கூறுகையில், ''இந்தாண்டு வழக்கத்தைவிட, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் கூடுதலாக விதை நெல் விற்பனையாகி உள்ளதால், நெல் சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளன.மேலும், முதல்போகத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லுக்கான விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளை பொன்னி நெல், 76 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,500 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 2,200 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல்போக சாகுபடிக்கு கிடைத்த விலையை விட, 2ம் போக சாகுபடி நெல்லுக்கு மேலும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.