உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நம்மை இழிவாக பேசியவர்களை அடக்கி பதிலடி; கொடுக்க தி.மு.க., - மா.செ.,க்கள் அறிவுறுத்தல்

நம்மை இழிவாக பேசியவர்களை அடக்கி பதிலடி; கொடுக்க தி.மு.க., - மா.செ.,க்கள் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி: 'நம்மை இழிவாக பேசியவர்களை அடக்கி தக்க பதிலடி கொடுங்கள்' என, கிருஷ்ணகிரியில் நடந்த மண்டலங்களுக்கான, தி.மு.க., இளைஞரணி சமூக வலைதள பயிற்சி முகாமில், மாவட்ட செயலாளர்கள் பேசினர்.கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மண்டலங்களுக்கு, தி.மு.க., இளைஞரணி சார்பில், சமூக வலைதளப் பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் பார்த்தகோட்டா சீனிவாசன், பிரபு கஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது: தமிழகத்தின், 8 கோடி மக்களின் வளர்ச்சி, உ.பி.,யின், 24 கோடி மக்களின் வளர்ச்சிக்கு இணையாக உள்ளது. தமிழகம் சாலை, சுகாதாரம், கல்வி என, அனைத்து துறைகளிலும் நாட்டில் முதலிடம் பெற்றுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர், இந்த ஆட்சி குறித்து, சமூகவலை தளங்களில் கொச்சைப்படுத்தி வருகின்றனர். அவர்களை நாம் ஒன்றிணைந்து சேர்ந்து தடுக்க வேண்டும். அந்த பொறுப்பை, தி.மு.க., இளைஞரணியிடம், அமைச்சர் உதயநிதி தந்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசியதாவது: நான் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி காலங்களில் எம்.எல்.ஏ.,வாக இருந்து விட்டேன். அதேபோல் நீங்களும் அடுத்த மூன்று தலைவர்களுடன், எம்.எல்.ஏ.,க்களாக இருக்க வேண்டும். நம்மை பற்றி சமூக வலைதளத்தில் அவதாறு வந்தால், அதை நாமே வளர்த்து விடுகிறோம். அது தவறு. மாறாக அவர்களை சமூக வலைதளம் எனும் களத்தில், போரில் எதிரிகளை வீழ்த்துவது போல், இழிவாக பேசியவர்களை அடக்கி, தக்க பதிலடி கொடுப்பது போல், லோக்சபாவில், 40 க்கு 40 பெற்றதுபோல், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் வெல்லும் வகையில், சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, சமூக வலைதள பயிற்சியாளர்கள், சூர்யா கிருஷ்ணமூர்த்தி, இளமாறன், யுவகிருஷ்ணா ஆகியோர், இளைஞரணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைதள பயிற்சிகளை அளித்தனர். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !