உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாலேகுளி முதல் சந்துார் வரை 20 ஏரிகளுக்கு கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பாலேகுளி முதல் சந்துார் வரை 20 ஏரிகளுக்கு கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து கால்வாய் மூலம், பாலேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியிலிருந்து சந்துார் ஏரி வரை உள்ள, 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், 13.80 கி.மீ., தொலைவிற்கு கடந்த, 2012-ல் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பாலேகுளி முதல் சந்துார் வரை உள்ள, 28 ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் ஆங்காங்கே துார்வாரும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த, 2 மாதங்களாக பெய்த மழையால், இக்கால்வாய் செல்லும், 28 ஏரிகளில், 8 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள் நிரம்பும் வகையில் கே.ஆர்.பி., அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்க, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 24 முதல், இடதுபுற கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாயில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. பாலேகுளி ஏரி முதல், சந்துார் ஏரி வரை உள்ள, 28 ஏரிகளில் ஏற்கனவே, 8 ஏரிகள் நிரம்பி உள்ளதால், மீதமுள்ள, 20 ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுபுற கால்வாய் மூலம், வினாடிக்கு, 43 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அவதானப்பட்டி ஏரி வழியாக, பாலேகுளி ஏரிக்கு சென்று, அங்கிருந்து உபரிநீர், சந்துார் வரை உள்ள ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை