| ADDED : நவ 25, 2025 05:50 AM
மதுரை: மதுரையில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த, 26 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன், 26. குளிர்பான நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேன். ஞாயிறுதோறும் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். நேற்று முன்தினம் அதிகாலையிலேயே ரிங் ரோடு மண்டேலா நகர் அருகே, 40 ஓவர் மேட்ச் விளையாட சென்றார். காலை 11:30 மணிக்கு அவரது தாய் போனில் பேசியபோது, விளையாடி விட்டு வருவதாக தெரிவித்தார். பகல் 2:00 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன், சோர்வாகி தண்ணீர் கேட்ட நிலையில் மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். டாக்டர்கள் கூறியதாவது: காலையில் எதுவும் சாப்பிடாமல் போதியளவு தண்ணீர் குடிக்காமல் விளையாடினால், உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன் போன்ற காரணங்களும் இருக்கின்றன. சாப்பிடாமல் விளையாடும் பட்சத்தில், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு மூளைக்கு தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் இறப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.