உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

நாமக்கல்:''தமிழக விவசாயிகளின் வங்கிக்கடன் முழுதையும் தள்ளுபடி செய்து மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்,'' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2020 முதல் இரண்டு ஆண்டுகள் கொரோனா தாக்குதலாலும், அதைத்தொடர்ந்து பருவம் தவறிய மழை, சில இடங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடன், விவசாய அபிவிருத்தி கடன் உள்ளிட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாமல், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், மத்திய அரசு வரும், நாளை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், தமிழக விவசாயிகள் கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்து அறிவிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு, அவர்களே குழு அமைத்து விலை நிர்ணயம் செய்யும் வகையில், நடப்பு லோக்சபா கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்.தமிழகத்தில் பல்வேறு அரசியல் காரணங்களால், மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் லோக்சபா தேர்தலில், தமிழக விவசாயிகள், பா.ஜ.,விற்கு எதிராக களமிறங்கி, மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தோல்வியடைய செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை