ப.வேலுார்: ப.வேலுாரில், அரசு பள்ளிக்கு புதிதாக சுகாதார வளாகம் கட்டித்தர கொண்டு வந்த தீர்மானத்துக்கு, தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட வெட்டுக்காட்டு புதுாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகே உள்ள சுகாதார வளாக கட்டடம், மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும், முட்புதர்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், மாணவியர் செல்ல அச்சப்படுகின்றனர். மழைக்காலத்தில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி, புதிய சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனால், ப.வேலுார் டவுன் பஞ்., 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன், கடந்த, 11ல் நடந்த மன்ற கூட்டத்தில், அரசு பள்ளிக்கு புதிய சுகாதார வளாகம் கட்டித்தர தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு, டவுன் பஞ்., தலைவர் லட்சுமி உள்பட இவரது ஆதரவு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், புதிய சுகாதார வளாக கட்டடம் கட்ட வைத்த தீர்மானம் நிறைவேறவில்லை. இதுகுறித்து தகவல், மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் ப.வேலுார் டவுன் பஞ்., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள், வெட்டுக்காட்டுப்புதுார் காலனியில் வசிக்கின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள், கழிப்பிட வசதியின்றி திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். ப.வேலுார் டவுன் பஞ்.,ல், தி.மு.க., உட்கட்சி பூசலால், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதற்கு, வரும் எம்.பி., தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.