உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேபிள், "டிவி ஆப்ரேட்டர்களிடம் நிலுவைத் தொகை கேட்டு மிரட்டல் அ.தி.மு.க., செயலாளர் மீது புகார்

கேபிள், "டிவி ஆப்ரேட்டர்களிடம் நிலுவைத் தொகை கேட்டு மிரட்டல் அ.தி.மு.க., செயலாளர் மீது புகார்

நாமக்கல்: 'தி.மு.க., மத்திய இணையமைச்சர் தம்பிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில், வேறொரு நபருக்கு கேபிள், 'டிவி' தொழில் நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படும்' என, மெயின் கேபிள், 'டிவி' ஆப்ரேட்டரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாமக்கல் தொகுதி செயலாளர் மிரட்டுவதாக, சப் கேபிள், 'டிவி' ஆப்ரேட்டர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.தமிழகத்தில் கேபிள், 'டிவி' ஒளிப்பரப்பை அந்தந்த மாவட்ட தி.மு.க., செயலாளர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் நடத்தி வந்தனர். இம்மாதம், 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பு துவங்கப்பட்டுள்ளது. அதற்காக அந்தந்த மாவட்டங்களில், எம்.எஸ்.ஓ., (மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர்) அமைக்கப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்- பரமத்தி சாலையில உள்ள தனியார் கட்டிடத்தில், எம்.எஸ்.ஓ., வைக்கப்பட்டுள்ளது. அதை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாமக்கல் தொகுதி செயலாளர் மயில்சுந்தரம், லோகேஸ்வரன் என்பவர் மூலம் நிர்வகித்து வருகிறார். ஏற்கனவே, தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் தம்பி சுரேஷ், கேபிள் 'டிவி' தொழிலில் ஈடுபட்டு வந்தார். மாவட்டம் முழுவதும், 300 சப் கேபிள், 'டிவி' ஆப்ரேட்டர்கள், அவரிடம் இணைப்பு பெற்று தொழில் செய்து வந்தனர். இணைப்பு ஒன்றுக்கு, 90 ரூபாய் முதல் 105 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்தனர்.கேபிள், 'டிவி' அரசுடைமையாக்கப்படும் என, அறிவிப்பு வெளியானவுடன் ஆகஸ்ட் மாதத்துக்குரிய தொகையை பெரும்பாலான ஆப்ரேட்டர்கள் செலுத்தவில்லை.அந்த கேபிள் ஆப்ரேட்டர்களின் பட்டியலை பெற்ற அ.தி.மு.க., சேர்ந்த நாமக்கல் தொகுதி பொறுப்பாளர் மயில்சுந்தரம், நிலுவையில் உள்ள தொகையை ஆப்ரேட்டர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் ஆப்ரேட்டராக நியமனம் செய்யப்படுவர் என, மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மயில்சுந்தரம் தெரிவித்தாவது:கேபிள், 'டிவி' ஆப்ரேட்டர்களிடம் லிங்க் தொகை தான் கேட்கப்படுகிறது. எதிர்காலத்தில் கட்டணச் சேனல் வந்தால், அவர்களுக்கு பணம் செலுத்தியாக வேண்டும். அதற்காகத்தான் பணம் கேட்கப்படுகிறது. அவர்களை மிரட்டவில்லை. லிங்க் தொகையை செலுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை