ப.வேலுார்: பொத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கும் குப்பையை, ராஜா வாய்க்கால் கரையோரம் கொட்டுவதாக, ப.வேலுார் செயல் அலுவலர் பேசி, வாட்ஸாப்பில் பதிவிட்ட ஆடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கும் குப்பையை, ராஜா வாய்க்கால் அருகே கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், குப்பை சரிந்து, ராஜா வாய்க்காலில் கலப்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால், ராஜா வாய்க்கால் கரையோரத்தில், குப்பையை கொட்டக்கூடாது. அங்குள்ள குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் என, நீர்வளத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார், ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலருக்கு, நோட்டீஸ் அனுப்பினார்.இதற்கு, ப.வேலுார் செயல் அலுவலர் சோமசுந்தரம், 'ராஜா வாய்க்கால் கரையோரத்தில், பொத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையையும் கொட்டி வருகின்றனர்' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசி, வாட்ஸாப்பில் ஆடியோ பதிவிட்டார். இதற்கு, பொத்தனுார் டவுன் பஞ்., ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பொத்தனுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணி கூறுகையில், ''பொத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கும் குப்பையை கொட்டுவதற்கு, அந்த எல்லைக்குள்ளேயே, இரண்டு இடம் உள்ளன. அங்கு மட்டுமே குப்பையை தரம் பிரித்து கொட்டி வருகிறோம். ப.வேலுார் செயல் அலுவலர் பேசிய ஆடியோவில் கூறியது தவறான தகவலாகும். ப.வேலுார் பைபாஸ் சாலையில் உள்ள ராஜா வாய்க்கால் கரையோரம், பொத்தனுார் டவுன் பஞ்., குப்பையை நாங்கள் ஒருபோதும் கொட்டியதில்லை,'' என்றார்.ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ''இந்த ஆடியோ நான் பேசியது தான். ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் குறிப்பிட்ட பகுதிக்கு மேல், பொத்தனுார் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான கடைகள், குடியிருப்புகள் தான் உள்ளன. அங்கு சேகரிக்கப்படும் குப்பை எங்கே கொட்டப்படுகிறது என, தெரியவில்லை. மேலும், பொத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், இரவு நேரத்தில் ராஜா வாய்க்கால் கரையோரம் குப்பையை கொட்டுகின்றனர். இதுகுறித்து கண்காணிக்க துாய்மை பணியாளர்களிடம் தெரிவித்துள்ளேன்,'' என்றார்.