| ADDED : மார் 15, 2024 02:46 AM
நாமக்கல்:நாமக்கல்,
சேந்தமங்கலம் சாலையில் உள்ள கொசவம்பட்டி ஏரி, 4 கோடி ரூபாய்
செலவில் புனரமைக்கப்பட்டது. ஏரியை சுத்தம் செய்து சுற்றிலும்
நடைபாதை அமைத்து, மின்விளக்கு, தண்ணீர் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து மக்கள்
பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது.கலெக்டர் உமா தலைமை
வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் நடைபாதையை தொடங்கி வைத்து
பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, நாமக்கல்
நகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாமக்கல்
நகருக்கு புறவழிச்சாலை, புதிய பஸ்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு
வருகிறது. பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.திறக்கப்பட்டுள்ள ஏரியின் நடைபாதையை, பொதுமக்கள் நடைபயிற்சிக்கு
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நடைபயிற்சி வருவோரின்
பயன்பாட்டிற்காக, மகளிர் சுய உதவிக்குழு மூலம் சிறுதானிய உணவுகளை
வழங்கிடும் வகையில் சிற்றுண்டியகம் அமைத்திட வேண்டும். ஏரி கரை
பலப்படுத்தப்பட்டுள்ளதால், நீர் ஆதாரத்தை கண்டறிந்து நீர்
தேக்கத்திற்கான வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள
வேண்டும். தேவையான வழிகாட்டி அறிவிப்பு பலகைகளை அமைத்து நகராட்சி
நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.எம்.பி.,
சின்ராஜ், நாமக்கல் நகராட்சி சேர்மன் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி,
நகராட்சி கமிஷனர் சென்னு கிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், துறை
சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.