மோகனுார், அரசு பள்ளிகளில் பயிலும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கற்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சைகை மொழி காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. தலைமையாசிரியர் நீதிராஜா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார்.இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சைகை முறையின் அவசியத்தை தெரிந்து கொண்டனர். கல்வி தொலைக்காட்சி மூலம், காலை, 11:00 மற்றும், மாலை, 5:00 மணிக்கு, சைகை மொழி பயிற்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில், ஆங்கில எழுத்துக்கள், எண்கள், வாரத்தின் நாட்கள், நிறங்கள், வாழ்த்துக்கள், மாதங்கள், உணவு பொருட்கள், குடும்ப உறுப்பினர்கள், நடத்தை செயல்பாடுகள், வெளிப்பாடுகள் போன்ற பாடங்கள், மாணவர்களுக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டு, அதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.இந்நிகழ்ச்சி, மோகனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி மூலம், மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.இதற்கான ஏற்பாடுகளை, வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தகுமார், மீனா, உமாதேவி, செல்வராணி, செந்தமிழ்செல்வி, வனிதா, இயன்முறை மருத்துவர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.