கோத்தகிரி;'கோத்தகிரியில் அம்ரூத் திட்டத்தில் 'மெகா' குடிநீர் தொட்டி, அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரி நகருக்கு, ஈளாடா மற்றும் அளக்கரை நீர் ஆதாரங்களில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. நகரில் பெருகிவரும் மக்கள் தொகையுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.இதனால், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், கோத்தகிரி நகரம் மற்றும் ஒட்டி உள்ள குக்கிராமங்களில், அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கும் வகையில், அம்ரூத் திட்டத்தில், 42.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, குழாய் இணைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.தாழ்வான பகுதியில் இருந்து கொண்டுவரும் தண்ணீர், கோத்தகிரி ராம்சந்ந் பகுதியில், 'மெகா' தொட்டியில் சேகரித்து, 'பம்பிங்' செய்து குடியிருப்புகளுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்காக, ராம்சந்த் பகுதியில் ஏற்கனவே தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் கூடுதலாக, 'மெகா' தொட்டி அமைப்பதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணி, நிறைவடையும் பட்சத்தில், தடை இல்லாமல் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.மக்கள் கூறுகையில், 'இப்பணியை விரைந்து முடித்து, சீரான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.