| ADDED : ஏப் 12, 2024 11:44 PM
குன்னுார்:குன்னுாரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் கடைகளுக்குள் கழிவு நீருடன் வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.குன்னுார் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வழக்கத்தை விட கடும் வெயில் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை, 2:30 மணி வரை, 3 மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டி தீர்த்தது.அதில், மாவட்டத்தில் அதிகபட்சமாக, குன்னுாரில், 9.3 செ.மீ., மழை பதிவானது.வெயிலின் தாக்கம் குறைந்து குன்னூரில் 'குளு குளு' காலநிலை நிலவியது. சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகரித்ததால் பஸ் ஸ்டாண்ட் 'லெவல் கிராசிங்' உட்பட பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்னுார் மார்க்கெட்டில் உள்ள கழிவு நீர் கால்வாய் தடுப்பு உடைந்து கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து அப்பகுதி காம்ப்ளக்ஸ் பகுதி முழுவதும் நிரம்பியது. ஆறு கடைகளுக்குள் சேறு களுடன் வெள்ளம் புகுந்ததில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் தைத்து வைத்த துணிகள் பாதிப்படைந்தது. இதே போல, ராஜாஜி நகர் பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மண் மற்றும் சேறு பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தேங்கியது. இதனை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் அகற்றினர். நகராட்சி மெத்தனம்
குன்னுார் நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் கூறுகையில், கனமழையால் மார்க்கெட்டிற்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுவதற்கு நகராட்சி அதிகாரிகள் காரணமாக உள்ளனர்.மார்க்கெட் வாடகை மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு, 2 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வந்த நிலையில், தற்போது, 14 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அடிப்படை வசதி தேவைகள் எதுவும் நகராட்சி செய்து தருவதில்லை. பொது நிதியிலிருந்து எந்த நிதியும் ஒதுக்கி பணிகள் மேற்கொள்வதில்லை. மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராத காரணத்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.எனவே, கால்வாய் சீரமைப்பு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்,'' என்றார்.