ஊட்டி ஆடாசோலை வழித்தடம் ஆக்கிரமிப்பால் தொல்லை
ஊட்டி;ஊட்டி -ஆடாசோலை சாலை ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஊட்டியிலிருந்து ஆடாசோலை வழியாக கடநாடு, அணிக்கொரை, சின்ன குன்னுார், ஒடையரட்டி, எப்பநாடு, தொரை ஹட்டி, காவிலோரை உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. ஊட்டியிலிருந்து, 5 கி.மீ., சாலை நகராட்சி, கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலை விரிவுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆடாசோலை வரை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையில் மலை காய்கறி தோட்ட ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு சாலையில் ஏற்படும் மண்சரிவால் மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்லும் மழைநீரால் சாலை பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,''நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலையை விரைவில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.