பந்தலுார் : பந்தலுார் தேவாலா கைதக்கொல்லி மக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நெல்லியாளம் நகராட்சியின், 16வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தேவாலா கைதக்கொல்லி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜி.டி.ஆர்., பள்ளி அருகே, 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேவாலா -கூடலுார் நெடுஞ்சாலையில், சாலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு, கடந்த எட்டு மாதங்களாக போதிய அளவுகுடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நகராட்சி மூலம், 2.8 லட்சம் ரூபாய் செலவில், குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகம் திட்டத்தை செயல்படுத்தாமல், வந்த நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். லாரியில் குடிநீர் வினியோகம்
அப்போது, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து, லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பின்பு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை. மேலும், தண்ணீர் லாரியிலும் இந்த பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய மறுத்துவிட்டனர். உடன்பாடு
இதனால், நொந்து போன கிராம மக்கள் மாற்று திறனாளி பெண் கவுலத் என்பவருடன் வந்து நகராட்சி அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், நகராட்சி கமிஷனர் குமரிமன்னன், கவுன்சிலர் செல்வராணி ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, கமிஷனர் குமரிமன்னன் கூறுகையில்,''அப்பகுதியில் உடனடியாக ரப்பர் குழாய் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவரை லாரியில் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனிநபர் குடிநீர் இணைப்பிற்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்யப்படும். குடிநீர் வினியோகம் செய்ய முடியாது என தெரிவித்த தற்காலிக லாரி டிரைவரை உடனடியாக பணி நீக்கம் செய்யப்படும்,'' என்றார். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.