| ADDED : ஜூன் 29, 2024 01:49 AM
பந்தலுார;பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில் சாலையின் நடுவே குழி ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து தடைபட்டு உள்ளது.பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.பந்தலூர் பஜாரில் இருந்து, 3 கி.மீ., மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு செல்ல, காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் ஆட்டோ பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த பகுதியில் அதிக அளவில் தேயிலை மற்றும் நேந்திரன் வாழை விவசாயிகள் உள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதற்கு லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், கூவமூலா எல்லையோர சாலையில், நடுவில் நீரோடை செல்வதற்கு அமைக்கப்பட்டு இருந்த சிறு பாலம் இடிந்து குழியாக மாறி உள்ளது.இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயன்பெற இயக்கப்பட்ட அரசு பஸ்சும் செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாயிகளும் தங்கள் விளைபொருட்களை தலைசுமையாக தூக்கி வந்து, வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிய உள்ளது. சாலை சேதமடைந்து பல நாட்கள் கடந்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், விரைவாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.