ஊட்டி:'சமூக நீதி பற்றி ஒரு வார்த்தை கூட பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை,' என, பா.ஜ., வேட்பாளர் முருகன் தெரிவித்தார்.நீலகிரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகன் ஊட்டியில் பிரசாரத்தை துவக்கினார். முன்னதாக, அவர் பா.ஜ., முகாம் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டாலின் தோல்வியின் விளிம்பில் இருப்பதால் என்ன பேசுவதென்று கூட தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார். சமூக நீதி பற்றி ஒரு வார்த்தை கூட பேச ஸ்டாலினுக்கு எள்ளளவு கூட அருகதை இல்லை. சமூக நீதி என்றால், அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும். அது தான் சமூக நீதி. பா.ஜ.,வில் மத்திய பிரதேசத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்தவர் துணை முதல்வராக உள்ளார். ராஜஸ்தானிலும் பட்டியலினத்தவர் தான் துணை முதல்வராக உள்ளார். சத்தீஸ்கரின் மலை வாழ் இனத்தை சேர்ந்தவர் முதல்வராக உள்ளார்.தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர்கள் கடைசி மூன்றாவது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுக்குமே, வேலைக்காகாத துறையை ஒதுக்கியுள்ளனர். மாநிலத்தில் பட்டியலின மாணவர்கள் படிக்கின்ற விடுதிகள் அவல நிலையில் உள்ளது. தமிழகத்தில் கடந்த, 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் பட்டியலினத்தவர்களை வஞ்சித்து வருகிறது. சமூக நீதியின் உண்மையான தந்தை நமது பிரதமர் மோடி தான். பா.ஜ.,வுக்கு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க மூன்று வாய்ப்புகள் வந்தது. அதில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அப்துல்கலாமை தேர்ந்தெடுத்தோம். அதன்பின், அவரை இரண்டாம் முறையாக தேர்ந்தெடுத்த போது, கருணாநிதி தடுத்தார். மோடி ஆட்சியில், பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மிகவும் பின் தங்கிய மலை வாழ் மக்கள் வாழுகின்ற பழங்குடியினத்தை சேர்ந்த தாய்மார்களை கவுரவிக்க வேண்டும் என்பதற்காக திரவுபதி முர்மு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மத்தியில், 27 ஓ.பி.சி., அமைச்சர் இருந்து கொண்டிருக்கின்றனர். 17 மலை வாழ் அமைச்சர்கள் உள்ளனர். 12 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர். ஓ.பி.சி., கமிஷனுக்கு சட்ட ரீதியாக அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தது பிரதமர் மோடி. இவ்வாறு, முருகன் கூறினார். பா.ஜ., மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட கட்சியினர் உடனிருந்தனர்.
முன்னாள் எம்.பி., யிடம் ஆசி பெற்ற முருகன்
ஊட்டியை சேர்ந்த பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதன், தனது, தளராத வயதிலும், முகாம் அலுவலகத்துக்கு வந்து, நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முருகனுக்கு ஆசி வழங்கி பேசுகையில்,'' நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது, இந்த முகாமிலிருந்து எனது பிரசாரத்தை துவக்கி வெற்றி பெற்றேன். தாங்களும் இந்த முகாமிலிருந்து பிரசாரத்தை துவக்கியுள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.